வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (செப் 16) சபை மண்டபத்தில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அமர்வின் போது வங்களாவடி சந்திப் பகுதியில் இருந்து சேவையாற்றும் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் தூரநோக்கு கொண்ட திட்டமொன்றை வகுத்து, மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைந்த சேவையை வழங்க பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உறுப்பினர் திருக்கேதீஸ்வரன் முன்மொழிந்ததில், குறித்த முச்சக்கர வண்டிகளுக்கான நிலையான தரிப்பிடம், சேவைக்கான பதிவேடு, வரி வசூல் உள்ளிட்ட அம்சங்கள் பிரதேச சபையால் கவனிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.
மேலும் அவர் சுட்டிக்காட்டியதாவது, அந்தப் பகுதியில் சில முச்சக்கர வண்டிகளிலும் தற்காலிக கடைகளிலும் சட்டவிரோத மதுசாரம் விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் பொலிஸார் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதையும் மக்கள் புகார் தெரிவித்திருப்பதையும் வலியுறுத்தினார். அதோடு, சிலர் தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் 30க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 10க்கும் குறைவான உரிமையாளர்களால் பகுதி நேர அடிப்படையில் மட்டுமே சேவை வழங்கப்படுகின்றது. இதற்கிடையில் மக்களின் வருகை அதிகரிப்பால் வங்களாவடி சந்திப் பகுதியில் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதியில் பிரதேச சபை அலுவலகம், முக்கிய எரிபொருள் நிலையம், நீண்ட கடைத்தொகுதி, பேருந்து நிலையம், தற்காலிக கடைகள், நடைபாதைகள் என்பன அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ள நிலையில், முச்சக்கர வண்டிகளும் அதே பகுதியிலேயே தரிப்பிடமாக பயன்படுத்துவதால், மக்களுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதாக உறுப்பினர்கள் அனுசியா ஜெயகாந்த், சுவாமிநாதன் பிரகலாதன், கருணாகரன் நாவலன், செல்லையா பார்த்தீபன் ஆகியோர் சுட்டிக்காட்டினர். மேலும், சில கடைகளுக்குள் சட்டவிரோத மதுசாரம் விற்பனை நடைபெறுவதாக உறுப்பினர் ஆனந்தராசா சதீஸ்குமார் சுட்டிக்காட்டினார்.
இதனால், குறுகிய நிலப்பரப்புக்குள் இயங்கும் தற்போதைய தரிப்பிடத்திற்கு பதிலாக, மக்களுக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் இடையூறு இல்லாதவாறு நிலையான இடமொன்றை வழங்குவது அவசியம் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதை மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு ஆராய்ந்து, சாதக-பாதகங்களை மதிப்பீடு செய்து செயற்படுத்துவது அவசியம் எனவும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் அசோக்குமார் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.