யாழ். மாவட்ட செயலகத்தில் சிறப்புற நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை பெண்கள் பணியகமும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய  சர்வதேச மகளிர் தினம் நேற்ற (31.03) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் “பெண்களின் தலைமைத்துவம்  செழிப்பான தேசத்தின் பெருமை”எனும் தொனிப்பொருளில்  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன்  அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண நகர அபிவிருத்தி சபை பிரதிப் பணிப்பாளர் திருமதி.க.கஜீவன் அவர்களும், கெளரவ விருந்தினராக பாலம் செயற்றிட்டம் முகாமையாளர் சுவீற்ரி தேவராஜா. அவர்களும் கலந்து கொண்டார்கள்.

பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி கலந்து கொண்டிருந்த விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்திய சிறந்த பெண் தொழில்  முயற்சியாளர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கெளரவிப்பு   மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்  அதிதிகளின் சிறப்புரைகள் என்பன நடைபெற்றது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்,  மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள்  எனப்  பலர் கலந்து கொண்டார்கள்

Share this Article