34 ஆண்டுகள் மக்காளுக்கு மருத்துவ பணியாற்றிய யாழ்ப்பாண சிரேஷ்ட மருத்துவர் ஸ்ரீஸ்கந்தராஜா நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்
34 ஆண்டுகள் அர்ப்பணிப்பின் அடையாளம் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களில், குண்டுவெடிப்புகள், இடம்பெயர்வுகள், மருந்து மற்றும் உபகரணப் பற்றாக்குறைகள், மின்சாரத் தட்டுப்பாடுகள் போன்ற எண்ணற்ற சவால்களுக்கு மத்தியில் கூட, யாழ் வைத்தியசாலை தனது சேவையை ஒருபோதும் நிறுத்தவில்லை.

அந்த மகத்தான சேவையின் பின்னணியில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றிய மருத்துவர்கள், தாதியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் அர்ப்பணிப்பே இருந்தது.
உண்மையில், இவ்வாறான ஒவ்வொரு சேவையாளரும் சமூகத்தின் பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியவர்களே. அவ்வாறான அர்ப்பணிப்புமிக்க சேவையாளர்களில் ஒருவர் தான் டாக்டர் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள்.
யாழ்ப்பாணத்தின் மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரான அவர், கடந்த 34 ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்
தனது பணிக்காலம் முழுவதும், குறிப்பாக யுத்தம் நிலவிய காலங்களிலும் அதன் பின்னரும், சத்திர சிகிச்சைக் கூடத்தில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாகவும், மயக்கமருந்தியல் பிரிவிலும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றினார்.

உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிய ஆயிரக்கணக்கான நோயாளிகளின் சிகிச்சையில் அவரது பங்களிப்பு அளப்பரியது. அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சி பெற்ற காலங்களில், அவர்களில் பலருக்கு வழிகாட்டியாகவும், மருத்துவமனை நடைமுறைகள், ஒழுக்கம் மற்றும் தொழில்முறைப் பண்புகளை பொறுமையுடனும் அன்புடனும் கற்பித்த சிறந்த மூத்த மருத்துவ அதிகாரியாகவும் திகழ்ந்தார்.
பதவியால் மட்டுமல்ல, தனது பணிவு, வழிகாட்டுதல் மற்றும் அன்பான அணுகுமுறையால் இளைய மருத்துவர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு மூத்த சகோதரராகவே அவர் விளங்கினார். உண்மையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பெருமை அதன் கட்டிடங்களிலோ அல்லது மருத்துவ உபகரணங்களிலோ மட்டுமல்ல அதன் ஒவ்வொரு சேவையாளரின் அர்ப்பணிப்பிலும் இருக்கிறது.
இவ்வாறான அமைதியாகவும் ஆரவாரமின்றியும் கடமையாற்றிய மருத்துவ அதிகாரிகளே ஒரு நிறுவனத்தின் உண்மையான பலம். அவர்கள் உருவாக்கிய சேவை மரபும் மனிதநேயமும் எதிர்கால தலைமுறைகளுக்கு என்றும் வழிகாட்டும் ஒளியாக இருக்கும்.