யாழ்ப்பாணம் நீராவியடி அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரத பாதை வழியாகச் செல்லும் முக்கியமான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று (22.03) காலை குறித்த இடத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மக்களின் அன்றாடப் பயணத்திற்கு அத்தியாவசியமான இந்த வீதி திடீரென மூடப்பட்டதன் விளைவாக, மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் கடுமையான சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, மாற்று பாதைகள் இல்லாததால், நீண்ட தூரங்களைச் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நேர இழப்பும், எரிபொருள் செலவும் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கருத்து தெரிவிக்கையில், இந்தப் பாதை மூடல் தொடர்பாக அதிகாரிகள் முன்கூட்டியே எந்தத் தெளிவான அறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாமை மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினர். அதேசமயம், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரடியாகக் களத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து, உடனடி தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய இந்த முக்கியப் பாதையை மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர கவனம் செலுத்த வேண்டிய அவசியம் தற்போது அதிகரித்துள்ளது.