நுண்ணுயிர் கொல்லி மருந்தின் 3 தொகுதிகளை தற்காலிகமாக பாவனையிலிருந்து நீக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த மருந்து தொகுதியை வழங்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி தொகுதி மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலையில் இரு நோயாளர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திய தடுப்பூசி தொகுதி ஆகியனவே இவ்வாறு பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் நுண்ணுயிர் கொல்லி மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் ஒவ்வாமைக்குள்ளான நோயாளிகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நுண்ணுயிர் கொல்லி மருந்தினை செலுத்தியதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை அதிகரித்ததன் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதான சமோதி சந்தீபனி என்ற யுவதி உயிரிழந்துள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.
இதனிடையே, யுவதிக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட அன்றைய தினம் மேலும் 12 நோயாளர்களுக்கும் குறித்த தடுப்பூசி ஏற்றப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுமுன்தினம்(ஜூலை 15) தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் பேராதனை வைத்தியசாலையில் 2715 நோயாளர்களுக்கு குறித்த தடுப்பூசி தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.