முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (ஒக்ரோபர் 4) சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் சிறுவர் மற்றும் முதியோர்களுடைய கலை நிகழ்வுகளும் சிறப்புற நடைபெற்றன.
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் ஐப்பசி 01 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சிறுவர்களது உரிமைகளை பேணுவதற்காகவும் ,அவர்களை மகிழ்ச்சியான உலகிற்கு இட்டு செல்வதற்காகவும், எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளை உருவாக்குவதற்குமாகவே ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர் தினம் ஐப்பசி 01 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
முதியவர்கள் ஒரு நாட்டினுடைய சொத்துக்கள் அவர்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் இதே தினம் முதியோர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வு நிலை சிரேஷ்ட போதனாசிரியர் கணேஸ்வரி இராஜசிங்கம் கலந்து சிறப்பித்திருந்தார் மேலும் இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) எஸ்.குணபாலன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்ட செயலாளர், கௌரவ விருந்தினர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.