முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று(டிசம்பர் 14) காலை முதல் கன மழை பொழிந்து வருகின்ற நிலைமையில் மாவட்டத்தில் முத்துஐயன் கட்டுக்குளம் தவிர்ந்த ஏனைய அனைத்துக் குளங்களும் நிறைந்து வான் பாய்கின்றன. அதேவேளையில் வீதிகளூடாக வெள்ளம் பாய்ந்து போக்குவரத்து இடை யூறுகளும் ஏற்பட்டுள்ளன.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு தாழ் நிலப்பகுதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம் பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் இடைத்தங்கல் முகாமிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மாங்குளம் பகுதியில் 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் மாங்குளம் மகா வித்தியாலயத்தில் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அதேவேளை மாங்குளம் பகுதியில் மொத்தமாக 36 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று பனிக்கன்குளம் கிராமத்திலும் 6 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை 6.00 மணி முதல் இரவு 8.20 மணி வரையான காலப்பகுதியில் வவுனிக்குளம் 143 மி.மீ மாங்குளம் 138 மி.மீ. மழை வீழ்ச்சியைப் பெற்றுள்ளன.
நேற்றுக் காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பனங்காமம் 130 மி.மீ., கல்விளான் 120 மி.மீ., மல்லாவி 102 மி.மீ., ஐயன்கன்குளம் 101 மி.மீ., இரணைமடு 102.5 மி.மீ., சேமமடு 55 மி.மீ. மழை வீழ்ச்சியைப் பெற்றுள்ளன என வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய முத்துஐயன் கட்டுக்குளம் தவிர்ந்த ஏனைய அனைத்துக் குளங்களும் நிறைந்து வான் பாய்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மாவட்ட ரீதியாக சேத விவரங்கள், பாதிப்புகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே சமயம், முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக மழை காரணமாக மருதங்குளம், ஐயன்கன்குளம் ஆகியன வான் பாய்கின்ற நிலைமையில் கொக்காவில் துணுக்காய் வீதியைக் குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்து வருகின்றது. இதனால் மக்களது போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
நேற்றிரவும் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கின்ற நிலைமையில் இன்று அதிகளவிலான பாதிப்பை முல்லைத்தீவு சந்திக்க வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.