சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய,பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
எனினும், இந்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் தொடர்பில் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அதனை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்தது.
அதன்படி பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதன் பின்னர் அதற்கு எதிராக ஆட்சேபனைகள் இருப்பின் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்ய முடியும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.