மாணவர்களுக்கு வீட்டுத்தோட்டச் செய்கை தொடர்பான செயன்முறை விளக்கமும் விதை பொதி வழங்கலும்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது.

இந்த ஆண்டுக்கான போட்டிக்குரிய விதைப்பொதிகளையும் செயன்முறை விளக்கங்களையும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஓகஸ்ட் 6) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பிரதித்திட்டப் பணிப்பாளர் வி விஜிதன் , விவசாயப் போதனாசிரியர் ச.பாலகிருஸ்ணன் ஆகியோர் வீட்டுத்தோட்டச் செயன்முறை தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும்,ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர். மாணவர்கள் அனைவருக்கும் வீட்டுத்தோட்டத்துக்கான பத்து வகையான விதைகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும்; தொடர் மதிப்பீட்டின் அடிப்படையில் சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி, உணவுக்கான நெருக்கடி, இயற்கைப் பசளைகளின் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தி, பாரம்பரிய விதைகளின் பாதுகாப்பு, மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக் கழிக்க வேண்டிய அவசியம் ஆகிய பல காரணங்களைக் கருத்தில் கொண்டே மாணாக்க உழவர் என்னும் திட்டத்தை கடந்த ஆண்டிலிருந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article