எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாடசாலை பை மற்றும் காலணி விலைகளை 10 வீதத்தால் குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளனர் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்த பின்னர், அமைச்சர் விடுத்த கோரிக்கையை அடுத்து, இந்த சலுகைகளை வழங்குவதற்கு உள்ளூர் உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உற்பத்தியாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடசாலை பை மற்றும் ஒரு சோடிக் காலணியின் விலை 350 முதல் 450 ரூபாவினால் குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இன்னும் ஒரு மாதத்தில் உற்பத்தியாளர்களுடன் விலைகள் தொடர்பாக மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படும் என்றும், அதில் நிலவும் சந்தை நிலவரங்கள் மற்றும் டொலரின் மாற்று விகிதங்களுக்கு ஏற்ப மேலும் விலை குறைப்பு தொடர்பாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.