பௌத்த விகாரை அமைக்கும் பணி இடைநிறுத்தம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரை காரணமாக இனமுறுகல் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து உத்தேச விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன.

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

நிலாவெளி பெரியகுளம் பகுதியில் வசிக்கும் குடும்பங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களும் 02 சிங்கள குடும்பங்களும் வசித்து வருகின்றன.

அங்கு வாழும் தமிழ் மக்கள் விகாரையின் நிர்மாண பணிகள் ஆரம்பிக்க இருப்பதை நிறுத்துமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் விகாரை நிர்மாணப்பணி தொடருமாக இருந்தால் இப்பிரதேசத்தில் பாரிய இனமுறுகல் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, கிழக்கு மாகாணத்தில் அனைத்து இன மக்களின் நலன்களை பேணும் ஆளுநர் என்ற அடிப்படையில் இனங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் முகமாக உத்தேச விகாரையின் நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share this Article