போத்தலில் அடைக்கப்பட்ட பனை மற்றும் தென்னை கள்ளுக்கான மது வரி, உடன் அமுலாகும் வகையில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதன்படி போத்தலில் அடைத்த கள்ளுக்கு மதுவரி திணைக்களத்தினால் விதிக்கபட்டிருந்த வரியானது 50 ரூபாவிலிருந்து 25 ரூபா வரை 50% இனால் குறைக்கப்பட்டுள்ளது.
பனை மற்றும் தென்னை என்பவற்றினால் உற்பத்தி செய்யப்பட்டு போத்தலில் அடைத்த கள்ளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை குறைக்குமாறு, நாடாளுமன்ற குழுக்களின் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் யாழ்ப்பாணம் வந்திருந்த விடையத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து, குறித்த விடையத்தை இராஜாங்க அமைச்சர் கௌரவ அருந்திக பெர்ணாண்டோ உடனடியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். இந்த நிலையிலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அறிவுறுத்துலுக்கு அமைய, பனை மற்றும் தென்னை என்பவற்றினால் தயாரிக்கப்படும் போத்தல் கள்ளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி அரைவாசியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கள்ளு தவறணைகளின் விற்பனை நேரத்தை மேலும் இரண்டு மணித்தியாலங்ளினால் நீடிப்பதற்கும் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, கள்ளு தவறணைகளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும், பிற்பகல் 5.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையும் மற்றும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களினால் நிர்வகிக்கபடும் கள்ளு தவறணைகள் காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும் திறந்துவைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய திருத்தங்ளின் பிரகாரம், தனிநபர் ஒருவரினால் கொள்வனவு செய்து கொண்டு செல்ல முடியுமான கள்ளின் அளவு, 1.5 லீற்றரிலிருந்து 3 லீற்றர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது