போதைப்பொருள் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டிய பொட்டி கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொட்டி என்ற விந்தனிய சூரியாரச்சி என்ற பெண் சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14/08) உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

14 வருட காலத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 850 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக ஈட்டியமை தொடர்பில் இந்த சந்தேகநபர் நேற்று (13/08) கைது செய்யப்பட்டதுடன், அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்ட கொழும்புக்கு அருகாமையிலுள்ள மூன்று வீடுகள், மூன்று கடைகள் மற்றும் ஆறு வங்கிச் கணக்குகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது தடை செய்து முடக்கியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.

அதற்கமைய, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

Share this Article
Leave a comment