சுகாதார அதிகாரிகள் எந்த தடையும் விதிக்காததால் பொது போக்குவரத்து சேவைகள் வழமை போல் செயல்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய இராஜாங்க அமைச்சர், பொது போக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் இதுவரை தங்களுக்கு அறிவுறுத்தவில்லை என்றும் கூறினார்.
நாடு இக்கட்டான கட்டத்தை கடந்து வருவதால் பேருந்துகள் மற்றும் ரயில்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.
அண்மையில் ஏனைய விதிமுறைகள் தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை மற்றும் அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் அவசரநிலைக்காக மாகாணங்கள் முழுவதும் பயணம் செய்வதற்கு மட்டுமே பொது போக்குவரத்து சேவைகள் செயல்பாட்டில் உள்ளன.
எனினும் கடந்த வாரங்களில் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களிடம் சோதனைகள் நடத்தப்படவில்லை.
இந் நிலையில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் ஆலோசனைப்படி, இந்த வாரத்திலிருந்து மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகள் மற்றும் ரயில்களில் சோதனைகள் அதிகரிக்கப்படும் என்றும் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.