இலங்கை பூப்பந்தாட்டச் சங்கத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் கிராமம் தோறும் பூப்பந்தாட்ட வீரர்களை தேசியம் மற்றும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லும் நோக்கில் பதின்மூன்று வயதிற்குட்பட்டவர்களை தெரிவு செய்து பயிற்சி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் அங்கமாக வடமாகாண முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் இன்றைய தினம்(மார்ச் 27) காலை 10.00 மணிக்கு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் பூப்பந்தாட்ட பயிற்சி ஆரம்பமானது.
இந்த நிகழ்விற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்தப் பயிற்சிக்கு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் இருந்து 30 மாணவ மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தினால் சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிழமையில் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இதற்கான பயிற்றுவிப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டமானது தொடர்ச்சியாக நான்கு வருடங்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவர் றொசான் குணவர்த்தன , இலங்கை பூப்பந்தாட்ட சங்கத்தின் தெரிவிக்குழுவின் தலைவர் பாலித்த ஹெட்டியாராட்சி, பிராந்திய அபிவிருத்தி குழுவின் செயலாளர் புத்திக்க , மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட பொறியியலாளர், மாவட்ட பயிற்றுவிப்பாளர், ஏனைய பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.