அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை மீறி ரயிலில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த உணவு வழங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
காங்கேசன்துறை – கொழும்பு இடையே சேவையில் ஈடுபட்டிருந்த ரயிலில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் அனுராதபுரம் மாவட்ட விசாரணை அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 96ஆம் இலக்க உத்தரவை மீறியதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அனுராதபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 1,000 மில்லிலிட்டர் உள்ளூர் உற்பத்தி குடிநீர் போத்தல் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.120 ஆகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அது ரூ.150க்கு பயணிகளிடம் விற்பனை செய்யப்பட்டமை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.
வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த நீதவான், குறித்த நிறுவனத்திற்கு ரூ.500,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், ரயில்களில் இயங்கும் உணவக சேவைகளில் இடம்பெறும் அதிக விலை வசூல் தொடர்பாக இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம், இதே சிற்றுண்டிச்சாலை இதற்கு முன்னரும் நுகர்வோர் உரிமை மீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் தொடர்ச்சியான கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை எச்சரித்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் 1977 என்ற நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உதவி இலக்கத்திற்கு அலுவலக நேரங்களில் முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது