இனிமேல் தனது புகைப்படத்தை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அனைத்து சுவரொட்டிகளிலும் தனது புகைப்படத்தை காட்சிப்படுத்துவதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ஏனைய அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியல் கோசம் அன்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே இன்று தேவை என வலியுறுத்திய ரணில் விக்ரமசிங்க, கட்அவுட் மற்றும் அரசியல் கோசங்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு இழுத்துச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கோஷங்கள் மற்றும் கட்அவுட் அரசியலுக்கு தான் எப்போதும் எதிரானவன் என்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, புதிய அரசியல் பயணத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149வது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (ஒக்ரோபர் 8) காலை கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் நேற்றும் இன்றும் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரிய கட்அவுட்டை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.