பிரபல வலைப்பதிவாளர் ‘நாஸ் டெய்லி’(Nas Daily) ஸ்தாபகரான நுசீர் யாசின் கடந்த 20 ஆம் திகதி இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையுடன் (SLTPB) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டடுள்ளார்.
சுற்றுலா ஊக்குவிப்பு அதிகார சபையின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் பெரும் உதவியாக இருக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில், இலங்கை தாராளம் மிக்க நாடாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது என தெரிவித்து நுசீர் யாசின் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
கொரோனா வைரஸ் காரணமாக தங்களது நாட்டுக்கு திரும்ப முடியாது தவித்த, பதுளை மாவட்டம், எல்ல பகுதியில் சிக்கிய 14 சுற்றுலா பயணிகளுக்கு, பிரதேசவாசிகள் தங்குவதற்கு இடம், உண்ண உணவு வழங்கி கவனித்ததாக அவர் அந்த காணொளியில் தெரிவித்திருந்தார்.
தமது கையில் பணம் இல்லாத நிலையில், பிரதேச மக்கள் உதவியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இவ்வாறு நாட்டில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, இலங்கை சுற்றுலாத் துறையினரால் முன்னெடுக்கப்படும் திட்டம் தொடர்பிலும் புகழ்ந்திருந்தார்.
சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த போதிலும், உச்சத்திலுள்ள போதிலும் இலங்கை மக்கள் சிறந்த உபசரிப்பாளர்கள் எனவும் அவர் அதில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.