தங்கம் என்று தெரிவித்து பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் 7 ஆண்டுகளின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் 2016 ஆம் ஆண்டு நடந்துள்ளது. சந்தேநபரிடம் ஐந்தரைப் பவுணில் தாலிக்கொடி செய்வதற்கு பணம் கொடுத்திருந்த நிலையில், தங்கத்துக்குப் பதிலாக அவர் பித்தளையில் தாலிக்கொடியைச் செய்து கொடுத்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர் தலைமறைவாகியிருந்தார்.
இந்தநிலையில், சந்தேகநபர் தெல்லிப்பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காங்கேசன்துறை விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று (ஜனவரி 11) கைது செய்யப்பட்டார்.
காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும், பொலிஸ் பரிசோதகர் நிதர்வன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நகைகள் அடகு வைக்கப்பட்டமைக்கான சிட்டைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.