பாதுகாப்பு வலயங்களிலுள்ள காணிகளை மக்களிடம் ஒப்படைக்க தனி அலுவலகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

வடக்கு, கிழக்கு அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பாரம்பரிய காணிகளை மக்களிடம் மீள ஒப்படைக்கும் பணிகளை முறைப்படுத்த நிரந்தர அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.

இதன்படி, இராணுவ பிரிகேடியர் தலைமையில் இயங்கும் இந்த அலுவலகம், ஆறு மாத காலத்திற்குள் உரிய பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும் காணி உரிமையாளர்களுக்கு அநீதி இழைக்காத வகையிலும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உரிய அலுவலகத்தை ஸ்தாபிக்குமாறு பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டளவில், பாதுகாப்புப் படையினரிடம் 23,850.72 ஏக்கர் மக்களின் காணிகள் இருந்ததாகவும், அதில் 20775.52 ஏக்கர் காணிகள் இவ்வருட தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 2023 பெப்ரவரியில் மேலும் 106 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2989.80 ஏக்கர் நிலம் மக்களுக்கு விடுவிப்பதற்காக இனங்காணப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியதன் பின்னர் இந்த காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய பாதுகாப்புக்கும் மக்களுக்கும் எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் பாரம்பரிய காணிகளை மக்களுக்கு விடுவிப்பதற்கான முறையான அமைப்பை தயாரிக்கும் நோக்கில் இந்த அலுவலகம் நிறுவப்பட உள்ளது.

Share this Article