பாடப்புத்தக விநியோகத்தில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் – கல்வி அமைச்சு!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

பாடசாலை பாடப்புத்தக கொள்முதல், களஞ்சிய முகாமை, விநியோகம் மற்றும் இருப்பு கட்டுப்பாட்டை மிகவும் சீரமைப்பதற்காக கல்வி அமைச்சு மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் இணைந்து பல புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயல்திறன் குறித்து ஆராய்வதற்காக, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இதற்கமைய, 2024ஆம் ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளினதும் மாணவர் எண்ணிக்கை, தற்போதுள்ள பாடப்புத்தக இருப்பு மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய புத்தகங்கள் பற்றிய விபரங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்காக புதிய கணினி தரவு அமைப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், புத்தக விற்பனை நிலையங்களை வலையமைப்பிற்குள் கொண்டு வருதல், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்கள் மூலமான பாதுகாப்பான அணுகல் அமைப்புகளை நிறுவுதல், தரத்தை உறுதிப்படுத்துவதற்கான முறையான ஆய்வு வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் ‘ஈ-தக்சலாவ’ இணையதளத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணையாக இற்றைப்படுத்தும் திட்டங்களும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நடவடிக்கைகள் மூலம் தற்போதுள்ள குறைபாடுகள் மற்றும் நிதி முறைகேடுகளைக் குறைத்து, பாடப்புத்தக செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் கலந்துகொண்ட கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடசாலை பாடப்புத்தக அச்சிடல், விநியோகம் மற்றும் நிதி முகாமை தொடர்பாக கடந்த ஆண்டுகளில் எழுந்த பல பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை சரியாகக் கணக்கிடாததால் மேலதிக புத்தக இருப்புக்கள் தேங்குதல், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அங்கு மேலும் வெளிப்படுத்தப்பட்டதாவது, 2002ஆம் ஆண்டில் பாடசாலை பாடப்புத்தக அச்சிடல் தொடர்பாக சுமார் 212 மில்லியன் ரூபா நிதி முறைகேடு சம்பந்தமாகத் தொடரப்பட்டிருந்த வழக்கின் தொடர்புடைய அச்சிடல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களை தற்போது கண்டறிய முடியாமல் போயுள்ளது என்பதாகும்.

எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், 2006ஆம் ஆண்டில் பாடப்புத்தகங்களை உரிய காலத்திற்குள் வழங்கத் தவறிய அச்சிடல் நிறுவனம் ஒன்றிடமிருந்து இழப்பீட்டுப் பணத்தை அறவிடுவது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளமை குறித்தும் இக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment