பங்களாதேஷில் நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பல்வேறு இடங்களில் வெடித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இதன்படி குல்னா மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ஏற்பட்ட மோதலில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் மொஹிபுஸ்ஸாமான் கொச்சி உயிரிழந்தார்.
வாக்கு சேகரிப்பின் போது தலையில் அடிபட்டதே இவரது மரணத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும் கோபால்கஞ்ச் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றின் மீது மர்ம நபர்கள் நடத்திய கைக்குண்டு தாக்குதலில் இரண்டு அன்சார் படையினர் மற்றும் ஒரு சிறுவன் உட்பட மூவர் காயமடைந்தனர்.
அத்துடன் ஜமாஅத்-இ-இஸ்லாமி கட்சியின் ஆதரவாளர்கள் வாக்களிக்கத் தடையிடப்பட்டதாகவும், பல இடங்களில் தங்கள் முகவர்கள் தாக்கப்பட்டதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்தநிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் பொலிஸார் நடுநிலையாகச் செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் பெரும் சவாலுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன