நெடுந்தீவில் நேற்றைய தினம்(ஜூன்20) அதிகாலையில் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரன் ஜீவராஜ் அமல்ராஜ் (அமல்-வயது 22) என்ற இளைஞனின் இறுதி ஊர்வலத்தின் போது உடலத்துடன் பொதுமக்கள் நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக நீதிவேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த கொலை சம்பவத்துடன் 04 சந்தேக நபர்கள் தொடர்புபட்டிருந்த நிலையில் நேற்றையதினம் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய மூவரையும் இதுவரை கைது செய்யாமை தொடர்பிலேயே இறந்த இளைஞனின் உறவினர்களும் , பொது மக்களும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
தேடுதல் நடவடிக்கைக்காக மேலதிக பொலிசாரை இதற்காக பயன்படுத்துவதுடன் இவர்களுடன் இணைந்து நெடுந்தீவு இளைஞர்களும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பொதுமக்கள் நெடுந்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மேலதிகாரிகளுடன் இது தொடர்பில் உடனடியாக பேசி மேலதிக் பொலிசாரை இத் தேடுதல் நடவடிக்கைக்காக இணைக்க நடவடிக்கை எடுப்பதுடன், இவர்களுடன் நெடுந்தீவு இளைஞர்களையும், கடற்படையினரையும் இணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நெடுந்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி உறுதி வழங்கியிருந்தார்.
இதன் பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பொலிஸ் நிலைய வளாகத்தினை விட்டு விலகி இறுதி ஊர்வலம் நல்லடக்கத்திற்காக தொடர்ந்தது.