வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் இன்று (நவம்பர் 14) நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தில் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் நூல் இரவல் வழங்கும் பிரிவான இரகுபதி நினைவு நூலகத்தில் உள்ள சிறுவர் பகுதி மற்றும் மாணவர் பகுதி நூல்களை காட்சிப்படுத்தல், மாணவர்களிடையே வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கதை கூறல் , மற்றும் மாணவர்களை நூலக வாசிப்பு வட்டத்தின் அங்கத்தவராக்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்தவகையில் காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய மாணவர்களுக்கும் , காலை 11.00 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய மாணவர்களுக்குமாக இவ் ஆரம்ப நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு சிறப்பான முறையில் இடம்பெற்றது.
நூலகம் தொடர்பாகவும் அதன் பயன்பாடு தொடர்பாகவும் மாணவர்களுக்கான விளக்கங்களை சிறகுகள் அமைய செயற்பாட்டாளரும் எமது நிலைய உறுப்பினருமான த. சுஜீவன் மற்றும் எமது மூத்த உறுப்பினரும் ,ஓய்வுநிலை அதிபருமான யோ. தவநாயகம் அவர்களும் சிறப்பாக வழங்கியிருந்தனர்.
இதேவேளை இந்நிகழ்வில் இரண்டு பாடசாலைகளின் மாணவர்கள் , அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நிலைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், மாணவர்களது வாசிப்பு விபரங்களை அவர்களே பதிவு செய்துகொள்ளவும் , தமது சுய ஆக்கங்களை எழுதிக்கொள்ளவுமாக அப்பியாசக் கொப்பியும் வழங்கப்பட்டது.
நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய மாணவர்களுக்கென சிறப்பு போக்குவரத்து ஒழுங்கும் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை “வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கியுள்ளதுடன் தொடர்ந்து இச் செயற்பாட்டினை முன்னெடுக்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.