நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இவ் வருடம் (2024) தமது கற்றல் நடவடிக்கையினை ஆரம்பித்த தரம் 01 ஐச் சேர்ந்த 45 மாணவர்களுக்கான வங்கிப் புத்தகங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
எமது Delftmedia நிறுவனத்தின் ஊடாக மாணவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை வளர்க்கும் நோக்குடன் ஒவ்வொரு வருடமும் தரம் 01 இல் இணைகின்ற மாணவர்களுக்கு நெடுந்தீவு பிரதேச சமுர்த்தி வங்கியின் ஊடாக இக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கணக்கு உள்ளவர்களுக்கு உரிய கணக்கிலும் , இல்லாதவர்களுக்கு புதிய கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அதிலும் பணம் வைப்பிடப்பட்டு கையளிக்கப்படுகின்றது.
இச் செயற்பாட்டின் ஊடாக நெடுந்தீவில் இரு விடயங்கள் முன்னேற்றமடைகின்றமை சிறப்பாகும்.
சிறுவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை ஏற்படுத்தி அதனூடாக எதிர்கால சந்ததியினரை வழப்படுத்தல், இதேவேளை எமது பிரதேச வறிய மக்களின் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் நெடுந்தீவு சமுர்த்தி வங்கியின் நடவடிக்கைக்கு ஊக்கமளித்து அதனூடாக எம் மக்களுக்கான நீடித்த சேவையினை வழங்கும் வகையில் பங்களிப்பு செய்தல் என்பன சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான கணக்கினை திறந்து மாணவர்களுக்கு கையளிக்க உதவிய நெடுந்தீவு கோட்டக்கல்விப் பணிமனையினர், நெடுந்தீவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கிச் சங்கத்தினர் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் எமது இணையம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந் நிகழ்வு தொடர்பான முழுமையான புகைப்படங்களை எமது முகநூல் ஊடாக பார்க்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்