அமரர் சின்னையா வேதநாயகம் எட்வேட்
நவரத்தினசிங்கம் அவர்கள் நெடுந்தீவு மகா வித்தியாலய முதல் அதிபர்.
தனது அர்ப்பணிப்பு மிக்க அளப்பரிய கல்விச்சேவையால் எம்மூர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துக் கொண்ட பெருமகனார். மாணவர்கள் கல்வியிலும், பண்பாட்டிலும், ஒழுக்கத்திலும், முன்னேற்றத்திலும் சிறந்து விளங்க வழி சமைத்த சிற்பி. கல்வியில் பின் தங்கியிருந்த மேல் வகுப்பு மாணவர்கள் மற்றும் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்யத் தவறிய மாணவர்களென அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு வகுப்புகளை ஏற்படுத்தி மாணவர்களை ஊக்குவித்த பெருந்தகை.
சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும், வெளியிடங்களுக்குச்
சென்று மேற் படிப்பைத் தொடர முடியாத வசதி குறைந்த மாணவர்களைத் தன் இல்லத்தில் வைத்து அவர்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்து கொடுத்த பரோபகாரி.
வீடுகளில் இருந்து படிக்க வெளிச்ச வசதி குறைந்த மாணவர்களை பாடசாலையில் (விடுதி போல்)தங்கிப் படிப்பதற்கும், அண்மையிலுள்ள மாணவர்கள் வந்து படித்துச் செல்லவும் “பெற்றோமக்ஸ்” வெளிச்ச வசதி செய்து கொடுத்தது மட்டுமன்றி, காலையில் எழுந்து படிக்கும் பிள்ளைகளுக்கு தேனீர் வசதியும் செய்து கொடுத்த உபகாரி.
எல்லா வசதிகள் இருந்தும் தம் பிள்ளைகளை இந்தியா போன்ற வெளி நாடுகளுக்கு மேற் படிப்பிற்கு அனுப்ப அக்காலத்தில் வகையறியாதிருந்த பெற்றோர் அவரை நாடியவேளை தேவையான வழிவகைகளைச் மிகுந்த அக்கறையுடன் செய்து கொடுத்த நல்ல வழிகாட்டி. பாடசாலை நிர்வாகத்தை மிகுந்த கட்டுக்கோப்புடனும், திறமையுடனும் கொண்டு நடத்திச்சென்ற ஆளுமை
அவர் இவ்வுலகை விட்டுச் சென்று இன்று (டிசம்பர் 01. 1975) நாற்பத்தைந்து ஆண்டுகள் மறைந்தாலும் என்றும் நெடுந்தீவு மக்கள் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டு கொண்ட மகத்தான
மா மனிதர்.
வாழ்க அவர் நாமம்
தகவல் – திரு.இரா தர்மலிங்கம்
முன்னாள் முகாமையாளர்
பல.நோ.கூட்டுறவு சங்கம்
நெடுந்தீவு