அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் தெரிவுசெய்யப்படாத முல்லைத்தீவு மாவட்ட மக்களில் ஒருபகுதியினர் நேற்று(ஜூன் 28) காலை மாவட்ட செயலக நுழைவாயினை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் .க.கனகேஸ்வரன் உடனடியாக தலையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
மக்களின் பிரச்சினையை கேட்டறிந்த பதில் மாவட்ட அரசாங்க அதிபர் நேரடியாக நலன்புரி சேவையுடன் தொடர்பினை ஏற்படுத்தி கலந்துரையாடினார்.
அவர்கள் அதற்கு வழங்கிய பதில் ஆடி மாதம் 10 ஆம் திகதிவரை மக்கள் ஆட்சேபனை தெரிவிக்க முடியும் எனவும் அதன் பின்னர் இறுதியாக தெரிவு செய்யப்படும் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு தங்கள் ஆட்சேபனை பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் ( காணி), மாவட்ட தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.