நயினாதீவு (நாக தீப) விகாரையை மையமாகக் கொண்ட சமய நிலையத்தை மேலும் விரிவுபடுத்தவும், யாழ்ப்பாணத்தில் தனித்துவமான இந்து ஆலயத்தை நிறுவவும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில்,
இளைஞர்பௌத்த சங்கத்தை எமது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும் சக்தியாக நாங்கள் கருதுகிறோம். 125 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த சங்கத்தை கௌரவிக்க விரும்புகிறேன்.
கொழும்பு கோட்டையில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணி இன்னும் 99 வருடங்களுக்கு இச்சங்கத்திற்கு வழங்கப்படுகின்றது. மேலும், அந்த இடத்தைச் சுற்றிலும் சுற்றுலா பகுதியாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கொழும்பு இளைஞர் பௌத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் தொனிப்பொருள் ஒரே இலங்கைக்கான கருத்தாடல் என்பதாகும். இதுவே இன்றைய நாட்டுக்குத் தேவை.
இன்று அனைவரும் எமக்கு ஒரு இலங்கை தேவை என்று கூறுகிறார்கள். யுத்தத்துடன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் 2025 ஆம் ஆண்டாகும் போது தீர்வு வழங்க எதிர்பார்க்கிறோம் இடம்பெயர்ந்தோர் மற்றும் காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான அரசியல் தீர்வுகள் வழங்கப்படும்.
அத்துடன், நயினாதீவு (நாகதீப) விகாரையை மையமாகக் கொண்ட சமய நிலையத்தை மேலும் விரிவுபடுத்தவும், யாழ்ப்பாணத்தில் தனித்துவமான இந்து ஆலயத்தை நிறுவவும் எதிர்பார்க்கிறோம்.
நாம் ஒன்றுபட்டு முன்னேறுவோம். இது குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாட வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்ப அவர்களின் ஆலோசனைகள், திட்டங்கள், தேவை என்றார்.