நயினாதீவுப் பகுதியில் உள் நுழைகின்ற வெளியேறுகின்ற பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவிகள் தொடர்பான விபரங்கள் பதிவு செய்யும் நடைமுறை குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியில் வைத்து வேலணைப் பிரதேச செயலக அலுவலர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனைக்கு அமைய இம்மாதம் 8 திகதி யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் இந்நடைமுறை கொண்டுவரப்பட்டதாக தெரியவருகிறது.
தீவுப் பகுதிகளின் போக்குவரத்தை வினைத்திறனுடன் அதிகரித்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையினை வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக கடந்த 27 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 30 திகதி வரை தீவுப் பகுதிகளுக்கு உள்வரும் வெளிச் செல்லும் பயணிகளின் விபரங்களை குறிகாட்டுவான் துறைமுகப் பகுதிகளில் வைத்து பதிவு செய்யும் நடைமுறை யாழ் மாவட்ட செயலக அறிவுறுத்தலுக்கு அமைய வேலணைப் பிரதேச செயலக அலுவலர்களால் முன்னெடுக்கப்படுகிறது.