நெடுந்தீவு பிரதேச கோட்டக்கல்வி அலுவலகம் தொலைபேசி , இணைய வசதிகள் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றமையால் பெரும் நிர்வாக நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரியவருகின்றது.
நெடுந்தீவு பிரதேசத்துக்கென தனி கல்வி கோட்டம் காணப்படுகின்ற போதும் அதற்கான கோட்டக் கல்வி அதிகாரி ஒருவர் நீண்டகாலமாக நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்பதுடன் பதில் கடமை அடிப்படையில் தீவகம் முழுவதும் ஒருவரை நியமித்துள்ள நிலையில் நெடுந்தீவுக்கான அவரது வருகை எவ்வளவு தூரம் சாத்தியமானதாக இருக்கும் என்பது கேள்விக்குரியதே.
இருப்பினும் நெடுந்தீவில் உள்ள எட்டு பாடசாலைகளின் தகவல்கள் மற்றும் விபரங்களை அனுப்புதல் தொடர்பாக எந்த விதமான இணைய வசதியோ தொலைபேசி வசதியோ இன்றி அங்கு பணியாற்றுகின்ற பணியாளர்கள் ஆவணங்களை பொதுமக்களின் உதவியுடன் தீவக வலய அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கும் நிலைமை தொடர்கின்றது.
நெடுந்தீவுக்கான கல்விக் கோட்டத்திற்கு அதிகாரி ஒருவரையும் நியமிக்கும் வகையிலும் அலுவலகத்திற்கான தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை உடன் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நெடுந்தீவின் கல்வி தொடர்பில் அக்கறையுடையோர் கோரிக்கை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.