தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பெரும் வெற்றிப்பெறுவோம்.
இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(ஜூலை 1) சனிக்கிழமை நடைபெற்ற அமர்வின் போது தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எதிர் கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாததால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். வங்கி கட்டமைப்பு பாதிக்கப்படும். அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என்றும் எதிர்பார்த்தார்கள்.
பெரும் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இருந்து நாடு தற்போது சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய கடன் மறுசீரமைப்பின்போது மூன்று பிரதான தடைகள் காணப்பட்டன. 128 சதவீதமாக காணப்படும் மொத்த தேசிய கடன்களை 2032 ஆம் ஆண்டு 95 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். 34.6 சதவீதமாக காணப்படும் மொத்த நிதி தேவைப்பாட்டை 2027 ஆம் ஆண்டு 13 சதவீதமாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
9.4 சதவீதமாக காணப்படும் வெளிநாட்டு சேவை கடன்களை எதிர்வரும் காலப்பகுதிகளில் 4.5 சதவீதமாக நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவைகளே பிரதான தடைகளாக காணப்பட்டன.
பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தவிர மாற்றுத்திட்டம் ஏதும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் 330 மில்லியன் டொலர் கடன் தவணை கிடைத்தவுடன் நாட்டின் கடன் நிலை உறுதிப்படுத்தப்பட்டது.
நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளன.
தேசிய கடன் மறுசீரமைப்பால் தமது வங்கி வைப்புக்கு பாதிப்பு ஏற்படுமோ என மக்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். அரசாங்கத்தின் தீர்மானங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.-என்றார்.