பெரும் போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாஸிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து தீவிர விசாரணை நடத்துவதற்கு மத்திய குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுமதியைப் பெற்றுள்ளது.
தெஹிவளையைச் சேர்ந்த 48 வயதான இவர், கடந்த மார்ச் மாதம் துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு, ஓகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக CCID-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்களை பாசிக் வெளியிட்டுள்ளார். ஈரானின் தாக்குதல்கள் தீவிரமாக இருந்த காலப்பகுதியில், துபாயில் உள்ள சொகுசு வணிக வளாகம் ஒன்றில் வைத்து பொலிஸார் தன்னிடம் சோதனையிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அப்போது அவரது மொபைல் போனில் ஈரான் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் இருந்ததாலேயே அவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஈரான் தொடர்புகள் குறித்தும் அவரிடம் துபாய் பொலிஸார் தினமும் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், தனது சொந்த செலவிலேயே விமான டிக்கெட் வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டு அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்டபூர்வமாக துபாய்க்குச் சென்ற பாசிக், அங்கு இரண்டு பெரிய வணிக நிறுவனங்களை நடத்தி, மிக ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் தனக்கு சொந்தமாக 5 ஹோட்டல்கள் இருப்பதாகவும், வெளிநாட்டில் ஹெலிகாப்டர் ஓட்டுவதற்கு தான் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னதாக இவர் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த இன்டர்போல் ‘சிவப்பு அறிவிப்பு’ திரும்பப் பெறப்பட்டிருந்த நிலையில், இலங்கை அதிகாரிகள் புதிய நோட்டீஸ் பெறுவதற்கான ஆயத்தங்களைச் செய்து வந்தபோதே இவர் மீண்டும் பிடிபட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் உட்பட, சிறைகளுக்குள் சமீபத்தில் நடந்த பல மோதல்களுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா என இலங்கை புலனாய்வாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது இந்த 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.