திலீபன் நினைவேந்தலுக்கு யாழில் தடைவிதிக்க மறுப்பு! -பொலிஸாரின் மனு நீதிமன்றால் தள்ளுபடி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகோரி யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திலீபனின் நினைவேந்தலைத் தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவுகூரும் செயற்பாடு இலங்கை சோசலிசக் குடியரசின் வர்த்தமானி1721/2 ஐயும், 2007ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவதாகவும் உள்ளது என்றும், நடத்தப்படும் பேரணியை 1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்களது மனுவில் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர்.

ஆறு பேரின் பெயர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டு, பொலிஸார் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்று(செப்ரெம்பர் 20) நடைபெற்றது. மனுவை ஆராய்ந்த நீதவான் வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

Share this Article