நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் திட்டமிருப்பதாகவும், ஆனால் தேர்தலுக்கு பிந்திய சூழலில் பாராளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட்டால், அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டியிருக்கும் எனவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் சட்டத்தரணியுமான அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் பிற்போடப்பட்டதால், வாக்காளர்களின் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்ததுடன், உடனடியாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அமீர் பாயிஸ் வெளியிட்ட கருத்தின் படி, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருவதாகவும், தேர்தலை நடத்துவதில் இதுவரை எந்த தடங்கலும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைக்குமாயின், அடுத்ததாக பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் எனவும், அப்படியான சூழலில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் குறித்து கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.