பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற முயற்சித்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம்இருந்து 12 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க கொலை செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு 1.5 மில்லியன் ரூபா கப்பம் கோரப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
பாதாள உலக குழுத்தலைவர் ‘புளூமெண்டல் சங்க’ எனக்கூறப்படும் நபர் ஒருவரிடம் இருந்து கடந்த 16 ஆம் திகதி காலை தமக்கு தொலைபேசி அழைப்பொன்று வந்தது என்றும், அந்தத் தொலைபேசி அழைப்புக்கு அமைய தம்மை கொலை செய்வதற்கு 80 இலட்சம் ரூபாவுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தவிர்ப்பதற்கு 1.5 மில்லியன் ரூபாவை கப்பமாக கோரினார் என்று ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார். தொலைபேசி அழைப்பின் மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு அமைய ஜனக ரத்நாயக்க பணத்தை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடம் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் அண்மையில் மூவர் கைது செய்யப்பட்டனர். ரம்புக்கனை பிரதேசத்தில் வைத்து குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.