சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த 18 – 05 – 2021 அன்று கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் , குமுதினி படகு படுகொலையில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும் மற்றும் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் பல குடும்பங்களுக்குமாக அறுபது குடும்பங்களுக்கு உலர் உணவு , சத்துணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பொதிகளும் , செவ்விளநீர் மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன .
சுதுமலையை சேர்ந்தவரும் லண்டனில் வாழ்ந்து வருகின்றவருமான சமூக ஆர்வலர் திரு . சச்சி தவா அவர்களின் ரூபாய் 28000 நிதியுதவியிலும் , புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டினை வதிவிடமாகவும் கொண்டவருமான சமூக செயற்பாட்டாளர் திருமதி .பத்மாஜனதேவி தர்மராஜா அவர்களின் 72000 ரூபாய் நிதியுதவி மூலமும் இவ்வுதவித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது .
1985 ல் சிறீலங்கா கடற்படையினரால் நடுக்கடலில் குமுதினி படகு மறிக்கப்பட்டு பயணிகள் மீது கோரத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது . இதில் 36 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததோடு 36 பொதுமக்கள் படுகாயம் அடைந்திருந்த நிலையில் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் அத்தருணத்தில் உயர்தர வகுப்பு பாடசாலை மாணவியாக கல்வி கற்றுக்கொண்டிருந்த திருமதி பத்மாஜனதேவி தர்மராஜா அவர்கள் மருத்துவ தாதிகளோடு இணைந்து படுகாயமடைந்த பொதுமக்களை பராமரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு புங்குடுதீவு மக்களின் , சமூக அமைப்புக்களின் பாராட்டுக்களை பெற்றிருந்தவர் என்பதும். குறிப்பிடத்தக்கது
சூழகம் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் , கருணாகரன் குணாளன் , உதயகுமார் மதுவண்ணன் ( சுதன் ) , ருத்திரன் , ரத்தினம் ஐயா , அலெக்ஸ் உள்ளிட்டவர்களும் இச்செயற்பாடுகளில் கலந்துகொண்டிருந்தனர் .
கடந்த காலங்களிலும் சூழகம் நிறுவனம் நெடுந்தீவில் பல்வேறு செய்பாடுகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.