யாழ் நகர கந்தப்ப சேகர செட்டியார் வீதி சுகாதார மற்றும் கலாச்சார சீர்கேடுகளின் தளமாக காணப்படுகின்றது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தையும் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் பேருந்து நிலையத்தையும் இணைக்கின்ற வீதிக்கு குறுக்கே செல்லும் உள் வீதியே இதுவாகும்.
வைத்தியசாலை வீதியில் உள்ள பிரபல வர்த்தக நிலையங்கள் உணவகங்கள் என்பவற்றின் களஞ்சிய சாலைகளுக்கு செல்லுகின்ற பிரதான பகுதியாக இவ்வீதி காணப்படுகின்றதுடன் புதிய தனியார் பேருந்து நிலையத்திலிருந்து வருகின்ற,செல்கின்ற பயணிகள் மற்றும் தீவுப் பகுதிகளுக்கு செல்வதற்காக பெரும்பாலும் இப்பொது வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் ஒரு அரசு அனுமதி பெற்ற கள் விற்பனை நிலையமும் உள்ளதுடன் இப்பகுதியானது மிகவும் அடர்ந்த பற்றைகளைக் கொண்ட கழிவுகளைக் கொட்டுகின்ற இடமாகவும் சமூக கலாச்சார சீர்கேடுகளை அரங்கேற்றி வரும் இடமாகவும் நீண்ட காலமாக சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினர் கண்டும் காணாத இடமாகவும் இருந்து வருகிறது.
களஞ்சியசாலைகளில் இருந்துவரும் கழிவுகள், பொது மக்களால் கொண்டு வந்து போடப்படும் கழிவுகளால் இப்பகுதி பெரும் துர்நாற்றம் வீசுகின்ற நிலையில் காணப்படுவதுடன் பெருமளவிலான பற்றைகள் காணப்படுவதால் இரவு நேரங்களில் இப்பகுதி ஊடாக பயணிப்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட இப்பகுதி அதுவும் நகரை அண்டிய பகுதி மிகவும் சுகாதாரச் சீர்கேடான நிலையில் காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
இதேவேளை அருகில் உள்ள மதுபான நிலையங்களில் மதுபானங்களை கொள்வனவு செய்து இவ் வீதி ஓரத்திலும் பற்றைகளின் மறைவிலும் இருந்து சட்டவிரோதமான முறையில் பாவனை இடம் பெறுதல் மற்றும் கலாச்சார சீர்கேடுகள் இடம் பெறுவதாலும் இவ் வீதியை பயன்படுத்துவதற்கு பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.
எனவே சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ள இப்பகுதியை யாழ் மாநகர சபையினர் நேரடியாக பார்வையிட்டு சுகாதார சீர்கேட்டுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுடன் சட்டவிரோத மதுபானவனை மற்றும் சமூகச் சீர்கேடுகளை யாழ் நகர பொலிசார் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இப்பகுதியை பயன்படுத்துகின்ற மற்றும் பாதிக்கப்படுகின்ற இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளதுடன் இப்பகுதியில் வீதி விளக்குகள் பொருத்தபடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வீதியூடாக பொதுமக்களின் இயல்பான போக்குவரத்துக்கு ஆவன செய்ய வேண்டும் என்பதே மக்களின் அவாவாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.