உளவு பார்க்கும் நோக்கத்துடன் இலங்கைக்குக் கப்பல்கள் எவையும் வரவில்லை. ஆராய்ச்சிப் பணிகளுக்காகவே வருகின்றன. அது சில நாடுகளால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. சீனா இலங்கை மீது ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா.சபையின் உபநிகழ்வாக நியூயோர்க்கில் நேற்றுமுன்தினம் (செப்ரெம்பர் 19) நடைபெற்ற சர்வதேச சமாதானம் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு வரவுள்ள சீனாவின் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுவரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தம் சீன கப்பல்களின் வருகையைத் தவறாக புரிந்து வைத்துள்ளது. இலங்கை சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ளதால், சீனா இலங்கை மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் என்று அந்த நாடுகள் நினைக்கின்றன என்று கூறியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆனால் அது தவறு என்றும் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் சீன விஞ்ஞான ஆய்வு நிறுவனத்துடன் இலங்கைக் கடல்வள ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்துக்கு அமையவே சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வந்து செல்கின்றன என்றும் அவர் விளக்கமளித்தார்.