ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இ.போ.ச. கோண்டாவில் சாலைக்கு சொந்தமான பேருந்தின் முன்சில்லு ரயர் வெடித்து தனியாக விலகியதால் இடம்பெறவிருந்த பேரனர்த்தம் சாரதியின் சாதுரியத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையிலி பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த 67 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.
நேற்று (ஜூலை 10) மதியம் 12.30 மணியளவில் ஊர்காவற்றுறையிலிருந்து புறப்பட்ட இ.போ.ச பேரந்துந்து மூன்றாம் கட்டைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம் திடீரென பெரிய சத்தத்துடன் பேருந்தின் முன்பக்க சக்கரத்தின் ரயர்வெடித்து தனியாக கழன்று சென்றது.
வேகமாக 67 பயணிகளுடன் சென்ற பேருந்தை உடன் நிறுத்தினால் பேராபத்து ஏற்படும் என்பதை கணப்பொழுதில் ஊகித்த சாரதி பேருந்தை பிறேக் போடாமலே மெதுவாக செலுத்தி 300 மீற்றர்வரை முன் சக்கரமின்றியே செலுத்தி சாதுரியமாக நிறுத்தியுள்ளார்.
சாரதியின் சாதுரியத்தால் இடம்பெறவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு பேருந்தில் பயணித்த 67 பேரும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
குறித்த பேருந்துக்கு மீள்நிரப்பப்ட்ட ரயர் போடப்பட்டதாலேயே இவ்வாறு ரயர் வெடித்து தனியாக சென்றதாகவும் ஏற்கனவே முன்னரும் இவ்வாறு மீள் நிரப்பப்பட்ட ரயர் போடப்பட்ட நிலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பேருந்தை செலுத்திய சாரதி எஸ்.தனபாலசிங்கம் என்பவர் சுமார் 35 வருடத்துக்கும் அதிகமாக சாரதி சேவையில் அனுபவம் உள்ளவர் என்பதாலேயே குறித்த விபத்தை தவிர்க்க முடிந்ததாகவும் விபத்தை சாதுரியமாக தவிர்த்த சாரதியை மக்கள் பாராட்டியதுடன் பல வயோதிப தாய்மார் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.