குறைந்த விலை மதுபானத் திட்டம் அதிகளவான இளைஞர்களை அடிமையாக்கும் இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையில் குறைந்த விலையில் மதுபானங்களை அறிமுகப்படுத்தும் தீர்மானத்தை மது வரி திணைக்களம் எடுத்திருப்பதை அடுத்து, இலங்கை மளநல மருத்துவர்கள் கல்லூரி இதை தொடர்ந்து தீவிர கவலை வெளியிட்டுள்ளது.

உலகளவில் தடுப்பதற்கூடிய புற்றுநோய்களுக்கு மூன்றாவது முக்கிய காரணியாக மதுவே இருந்து வருகிறது. மேலும், தினமும் ஒரு அல்லது இரண்டு பானங்களை உட்கொள்வது கூட புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பது, “பாதுகாப்பான அளவு” எனும் பொதுவான நம்பிக்கைக்கு முரணாகும்.

மதுபான விலைகள் குறைவதால், சமூகத்தின் பல்வேறு அளவிலுள்ள மக்களிடையேயும் மது அருந்தும் விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்பது ஆய்வுகளில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. குறைந்த விலையில் மது கிடைப்பதால், இளைய தலைமுறையினர் அதனை எளிதாகக் கிடைக்கும் பொருளாகக் கருதி அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கலாம். இதனால், இளைஞர்களிடையே மதுப்பழக்கம் வேகமாகப் பரவக்கூடிய அபாயம் உள்ளது எனக் கல்லூரி எச்சரிக்கின்றது.

இதே நேரத்தில், சுகாதார பொருளாதார ஆய்வுகள், மதுபானங்களின் விலையை உயர்த்துவதன் மூலம் மது உபயோகத்தின் அளவைக் குறைத்தல், புற்றுநோயைத் தடுக்க மிகவும் செலவுக்குறைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கக்கூடும் என்பதை வலியுறுத்துகின்றன.

மேலும், மதுபழக்கம் மனநல சிக்கல்கள், மனஅழுத்தம், மற்றும் தற்கொலை முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் நேரடியான தொடர்புடையதாகும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி, இளம் பருவத்தினரிடையே மது அருந்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது; அதில், மதுவை அருந்தியவர்களில் 39.3% பேர் 14 வயதிற்கு முன்பே முதல் முறையாக மதுவைப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.

Share this Article