இலங்கையின் சில்லறை எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை விலையை விட குறைன விலையில் எரிபொருளை விற்பனை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம். பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருள் சில்லறை விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
மூன்று நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதியில் முடிவடையும் என்றும், அதன்பின்னர் ஒரு மாதத்துக்குள் அதன் செயற்பாடுகள் ஆரம்பமாகும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது அரசாங்கம் சராசரியாக மாதமொன்றுக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலரை எரிபொருள் கொள்வனவுக்காகச் செலவு செய்கின்றது. இந்த மூன்று நிறுவனங்களும் சராசரியாக 120 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை மாதாந்தம் இறக்குமதி செய்யும் என அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
இந்த நிறுவனங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்க அனுமதித்தால், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருளுக்கான தேவை குறையலாம். அதனால் அரசாங்கத்தின் எரிபொருள் கொள்வனவுச் செலவு குறையும் என்று அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் அரச அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது சுமார் ஆயிரத்து 200 நிரப்பு நிலையங்கள் உள்ளன. புதிய நிறுவனங்களின் செயல்பாட்டுக்குப் பின்னர், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் சுமார் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்களே எஞ்சியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.