பின்வரும் அரச சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக கௌரவ ஜனாதிபதி அவர்களினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது
கீழ்க்காணும் சேவைகள் வழங்கலில் ஈடுபடும் எந்தவொரு அரச கூட்டுத்தாபனத்திலிருந்து அல்லது அரச திணைக்களத்திலிருந்து அல்லது உள்ளூராட்சி நிறுவனத்திலிருந்து அல்லது கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து அல்லது அவற்றின் கிளைகளிலிருந்து வழங்கப்படும் சேவைகள் பொது மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது எனக் கருத்தில்கொண்டு,
அந்தச் சேவைகளை வழங்குவதற்கு இடையூறு அல்லது தடைகள் ஏற்படக்கூடும் என்ற காரணத்தினாலும்,
மற்றும் சுகாதார மற்றும் பாதுகாப்புச் சேவைகள் கொவிட் -19 தொற்றுப் பரவல் நிலைமையினால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய இணைந்த சேவைகளை வழங்குவதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள காரணத்தினாலும்,
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கொவிட் -19 நோய்த் தடுப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் கவனத்தில் கொண்டு –
பின்வரும் அரச சேவைகளை, ஜூன் 15ஆம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அத்தியாவசிய சேவைகள் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது
* இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள் , வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு .
* பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் திரவ வாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருள் வழங்கல் அல்லது பகிர்ந்தளித்தல்.
* சுங்கக் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காகத் துறைமுகம் எனப் பொருள்கோடல் செய்யப்பட்டுள்ள எந்தவொரு துறைமுகத்திலுள்ள கப்பலிலிருந்து எண்ணெய் அல்லது எரிபொருளை வெளியேற்றுதல் , கொண்டுசெல்லல் , தரையிறக்குதல் , களஞ்சியப்படுத்துதல் , ஒப்படைத்தல் அல்லது அகற்றுதல் தொடர்பான நிறைவேற்றப்பட வேண்டிய அல்லது அத்தியாவசியமான அனைத்துச் சேவைகள் , வேலைகள் அல்லது எந்த வகையிலுமான தொழில் பங்களிப்பு.
* பொருட்களைக் கொண்டு செல்வதற்காக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் மற்றும் வீதிப் போக்குவரத்துக்காக போக்குவரத்துச் சபையின் மூலம் மேற்கொள்ளப்படும் சகல பொதுப் போக்குவரத்துச் சேவைகள்.
* மேற் சொல்லப்பட்ட பொதுச்சேவைகளானது சேவைகளின் தேவைப்பாட்டின் வண்ணம் மேற்கொள்ளுவதற்காகத் தேவைப்படும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
* சகல மாவட்டச் செயலாளர் அலுவலகங்கள் , பிரதேச செயலகங்கள் , கிராம உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கமத்தொழில் ஆராய்ச்சி உதவியாளர்கள் உள்ளிட்ட மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் துறைசார் மட்டத்திலுள்ள உத்தியோகத்தர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது செயற்படுத்தப்பட வேண்டிய தேவையான எந்தவொரு தன்மையிலான சகல சேவைகள் , வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு.
* இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட சகல அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவை நடவடிக்கைகள் . உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கழிவுப்பொருட்கள் முகாமைத்துவச் சேவை நடவடிக்கைகள்.
* வரையறுக்கப்பட்ட இலங்கை கூ.மொ.வி.நி., கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் , உணவு ஆணையாளர் திணைக்களம் , கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சகல உணவு , குடிபானப் பொருட்கள் உள்ளிட்ட பொது மக்களுக்குத் தேவையான ஏனைய சகல நுகர்வுப் பொருட்களை வழங்குதல் , களஞ்சியப்படுத்துதல் , விநியோகித்தல் மற்றும் ஒழுங்குறுத்துகை நடவடிக்கைகள் தொடர்பாகத் தேவையான அல்லது மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கருதப்படும் சகல சேவைகள் , வேலைகள் அல்லது எந்தவொரு விதத்திலான தொழில் பங்களிப்பை வழங்குதல்.
* மாகாண சபைகளின் கீழுள்ள சகல அரச அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவகையிலான சகல சேவைகள் , வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு.