காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் வாரம் ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் தொடங்கப்படும் என்று சுபம் குழுமத்தின் தலைவர் மற்றும் காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை முதலீட்டாளர் பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று (டிசம்பர் 15) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
சுபம் குழுமம் இந்தியாவில் பல்வேறு வணிக நிறுவனங்களை உள்ளடக்கியது என அவர் விளக்கினார். குறிப்பாக, 500க்கும் மேற்பட்ட பாரவூர்தி போக்குவரத்து சேவைகளை வழங்கும் நிறுவனமாக இயங்கி வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை, காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது மீண்டும் ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும், மேலும் இது சுபம் குழுமத்தின் நேரடி மேலாண்மையில் இயங்கும் என்று அவர் தெரிவித்தார்.
சேவை மீளத் தொடங்கும் போது மேம்பட்ட வசதிகள் வழங்கப்படும். பயணக் கட்டணம் இருவழிக்கானது ₹9700 இல் இருந்து ₹8500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 10 கிலோ வரை இலவச சுமை அனுமதி வழங்கப்படும், அதிக எடையுடைய சுமைக்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
பயணிகளுக்கான உணவு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. காலை உணவுக்கு இட்லி, பொங்கல், நண்பகல் உணவுக்கு மரக்கறி பிரியாணி போன்றவை பயணக் கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பசும்பாலில் தயாரிக்கப்பட்ட தேநீர், காப்பி, மற்றும் குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்படும்.
சிறப்பு வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் கப்பலில் அமைக்கப்படும். பயணச்சீட்டு முன்பதிவு sailsubham.com இணையதளத்தின் மூலம் செய்யப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகளை மையமாகக் கொண்டு குறைந்த செலவில் பயண திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது வட மாகாணத்தின் பல சிறப்புகளை பயணிகளுக்கு அனுபவிக்க வாய்ப்பளிக்கும் என அவர் கூறினார்.
சுபம் குழுமம் தொடர்ச்சியாக மேம்பட்ட சேவையை வழங்கும் உறுதிப்பாட்டில் உள்ளது என அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.