கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றச்சாட்டில், கிளிநொச்சி, கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடத்தப்பட்ட நபரும் மீட்கப்பட்டுள்ளார்.
கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரி ஒருவர், வேன் ஒன்றில் வந்த கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நேற்று சனிக்கிழமை (செப்ரெம்பர் 2) உறவினர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வேனில் வந்த 12 பேர் அடங்கிய கும்பலே குறித்த வியாபாரியை கடத்திச் சென்றதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட பழ வியாபாரி 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை நபர் ஒருவரிடம் வாங்கியதாகவும், அதனை அவர் மீள செலுத்தாத நிலையில் இரு தரப்புக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுவந்த நிலையிலேயே வியாபாரி கடத்தப்பட்டுள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இக்கடத்தல் கும்பல் கிளிநொச்சியில் மறைந்திருப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சிக்கு விரைந்த பொலிஸார் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஐவரையும் கைது செய்ததோடு, கடத்தப்பட்ட பழ வியாபாரியையும் மீட்டுள்ளனர்.