அனலைதீவு, எழுவைதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த எழுதாரகைப் படகினைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாக காணப்பட்டமையினாலும் அதற்கான வருமானம் போதமையாக காணப்பட்டமையாலும் இச் சேவை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது
இது தொடர்பாக ஆராயும் சிறப்புக்கூட்டம் நேற்றைய தினம் (டிசம்பர் – 15) ஆளுனர் செயலகத்தில் வடமாகண ஆளுனர் திருமதி.பி.எஸ்.சாள்ஸ் அவர்கள் தலமையில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது இப்படகுக்கான வருமானம் போதமையாக காணப்படுகின்றது எனவும் அதனை விட செலவுகள் அதிகாமாக காணப்படுவதுடன் பராமரிப்பு செலவுகளும் அதிகமாக காணப்படுவதால், இப்படகுச் சேவையினை தொடர்ந்து நடாத்த முடியாது காணப்படுவதாகவும் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய தேவைப்பாடு உள்ளது எனவும் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பற்றிக் டிரஞ்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வடதாரகைப் படகினைப் போன்று எழுதாரகை நெடுந்தாரகைப் படகுகளினை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆளுகைக்குட்படுத்தி பராமரிக்க முடியும் அல்லாது விடல் பிரதேச சபையின் ஆளுகைக்குட்படுத்தி மாகாண சபையின் வருடாந்த நிதி ஒதுக்கீடு மூலம் விஷேட நிதி ஒதுக்கிடினை மேற்கொள்ள வேண்டும். இவை கைகூடாத பட்சத்தில் தனியார் நிறுவனங்கள் ஊடாக இச் சேவையினை செய்ய முடியும் எனவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இவற்றைக் கவனத்திற் கொண்ட ஆளுனர் அவர்கள் தீவகத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் படகுகளின் எண்ணிக்கை அவற்றில் சட்டரீதியாக காப்புறுதி செலுத்தப்பட்டு அனுமதியுடன் செயற்படும் படகுகள் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டண விபரங்கள் போன்ற தகவல் அடங்கிய விபரங்களினை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.
தீவகத்தில் வாழுகின்ற மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு படகுச்சேவையினை உத்தரவாதத்துடன் நடாத்துவதற்கு பயணிகளுக்கான பாதுகாப்பு அங்கிகள், படகின் தரம், பதிவுக்காப்புறுதி, உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொன்றார்.