உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

தற்போது தடுப்புக்காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக இன்று (05/03) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெயரிடப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் சுரேஷ் சலேயை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அனுமதி பெற்றுக்கொண்டது.

இந்த சூழலில் போதுமான ஆதாரங்கள் இன்றி தனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவை மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்காக, இது தொடர்பான வழக்குக் கோப்புகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை வழங்குமாறு சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் நேற்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

தனது கட்சிக்காரரைச் சந்திப்பதற்கு மேலதிக ஒரு நாளை ஒதுக்கித் தருமாறும், அவருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்குமாறும் சட்டத்தரணிகள் கோரினர்.

வழக்குக் கோப்புகளின் பிரதிகளை வழங்க நீதவான் உத்தரவிட்ட போதிலும், ஏனைய கோரிக்கைகளை நிராகரித்தார்.

சுரேஷ் சலேயைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அதுவரை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்காததே இதற்குக் காரணமாக அமைந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், சுரேஷ் சலேயைத் தடுப்புக்காவலில் வைத்திருப்பது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டது.

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பப்பட்டமை, சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள 35882/24 இலக்க வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடப்பட்டுள்ளார்.

தற்போது தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேக நபரை, நீதவான் பொருத்தமான ஒரு நாளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து பார்வையிடுமாறும் திணைக்கள அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், இதற்கான விடயங்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய உத்தரவிட்டதுடன், விரைவில் அங்கு சென்று சந்தேக நபரைப் பார்வையிடுவதாகவும் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment