ஈரானிய இராணுவம் இனி வெறும் ஞாபகம் மட்டுமே – ட்ரம்ப் ஆவேசப் பேச்சு!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

குவைத் ட்ரோன் தாக்குதலில் பலியான ஆறு அமெரிக்க இராணுவ வீரர்களின் உடல்களுக்கு டோவர் விமானப்படைத் தளத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் ஈரானுக்கு எதிரான தனது இறுதி எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளார்.

உணர்ச்சிகரமான அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து ஆவேசமாகப் பேசிய அவர், ஈரானிய இராணுவம் தற்போது முழுமையாகச் சிதைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

ஈரானிடம் இருந்து எதனை எதிர்பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நிபந்தனையற்ற சரணடைவை மட்டுமே எதிர்பார்க்கிறோம்” என ட்ரம்ப் பதிலளித்தார். ஈரான் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு மண்டியிடும் வரை அல்லது எதிர்த்துப் போராட ஒருவர்கூட இல்லாத நிலையை உருவாக்கும் வரை அமெரிக்காவின் தாக்குதல் தொடரும் என அவர் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.

யுத்தம் தொடங்கி ஒரு வாரத்திற்குள் ஈரானின் இராணுவ பலம் முடக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், ஈரானிய கடற்படையின் 44 போர்க்கப்பல்கள் மற்றும் வான்படையின் அநேகமான விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். “ஈரானிய இராணுவம் தற்போது கிட்டத்தட்ட ‘இல்லவே இல்லை’ என்ற நிலைக்கு வந்துவிட்டது. ஏவுகணைத் தாக்குதல்கள் குறைந்துள்ளன; அவர்களின் ஆயுத உற்பத்தி மையங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” என அவர் விவரித்தார்.

ஈரானை ஒரு “உலகப் புற்றுநோய்” என வர்ணித்த ட்ரம்ப், இந்தப் போர் அமெரிக்காவிற்கு மட்டுமன்றி, இஸ்ரேல் மற்றும் முழு உலகிற்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் எனத் தெரிவித்தார். அக்டோபர் 7 சம்பவத்தை எவரும் மறக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், கடந்த 47 ஆண்டுகளில் எந்தவொரு அதிபரும் எடுக்காத துணிச்சலான முடிவை தாம் எடுத்துள்ளதாகவும், ஈரானின் உயர்மட்டத் தலைமை முற்றாகத் துடைத்தெறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யுத்தத்தினால் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளமை குறித்துக் கவலைப்படவில்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், இது ஒரு குறுகிய கால மாற்றமே என்றும், விரைவில் விலைகள் வீழ்ச்சியடைந்து அமெரிக்காவின் மூலோபாய எண்ணெய் சேமிப்பு மீண்டும் நிரப்பப்படும் என்றும் உறுதியளித்தார்.

தரைப்படை வீரர்களை அனுப்புவது குறித்து தற்போது பேச விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பது சாத்தியமான ஒன்றே எனவும் சுட்டிக்காட்டினார்.

ஈரானின் அடுத்தகட்டத் தலைவர்கள் யார் என்று தெரியாத அளவுக்குத் தலைமைத்துவ வெற்றிடத்தை அமெரிக்கா உருவாக்கியுள்ளதாக ட்ரம்ப் தனது பேட்டியில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

Share this Article