உலகமே திக் திக் என்று பார்த்துக்கொண்டிருந்த அந்த மாபெரும் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது.

ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமேனி இஸ்ரேல் நடத்திய மிகத்துல்லியமான வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜெருசலேம் போஸ்ட் அதிரடிச் செய்தியை வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு டெஹ்ரானில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், இடிபாடுகளுக்குள் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சனிக்கிழமை இரவு இஸ்ரேலிய வான்படை டெஹ்ரானில் உள்ள ஈரானியத் தலைமையகத்தின் மீது ‘பங்கர் பஸ்டர்’குண்டுகளைப் பயன்படுத்தி பாரிய தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் காமேனி தங்கியிருந்த ரகசியக் கட்டடம் முற்றாகத் தரைமட்டமானது.
தாக்குதல் நடந்து சில மணித்தியாலங்களுக்குப் பிறகு, அந்த இடத்திலிருக்கும் இடிபாடுகளுக்குள் இருந்து 86 வயதான அலி காமேனியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேலியப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 1989-ஆம் ஆண்டு முதல் ஈரானின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ஒருவரின் முடிவு, இப்போது உலகையே உலுக்கியிருக்கிறது.
பிபிசி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்திகளின் உண்மைத்தன்மை
முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆற்றிய உரையில், “இந்தச் சர்வாதிகாரி இப்போது இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் வலுவாக உள்ளன” என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பிபிசி மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகிய சர்வதேச ஊடகங்கள் முக்கியச் செய்தியாகப் பதிவு செய்திருந்தன. நெதன்யாகுவின் அந்த மர்மமான பேச்சின் பின்னணியில் இருக்கும் உண்மை, இப்போது காமேனியின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
37 ஆண்டுகால ஆட்சியின் முடிவு!
அலி காமேனி 1981 முதல் 1989 வரை ஈரானின் அதிபராகப் பணியாற்றினார். அதன்பிறகு 1989-இல் ஈரானின் அதியுயர் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், கடந்த 37 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்தார். மத்திய கிழக்கில் ஈரானின் ஆதிக்கத்தையும், இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களையும் முன்னெடுத்த மிக முக்கியமான நபராக அவர் பார்க்கப்பட்டார். அவரது மறைவு ஈரானியப் புரட்சிகரக் காவல்படைக்கும் அதன் நட்பு அமைப்புகளுக்கும் விழுந்த ஈடுசெய்ய முடியாத மரண அடியாகக் கருதப்படுகிறது.
காமேனியின் கொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் ஒரு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் வெறித்தனமான பதிலடியைத் தொடுக்கலாம் என்பதால், இஸ்ரேலிய மக்கள் அனைவரும் நாட்டின் ‘உள்நாட்டுப் பாதுகாப்புப் படை’ வழங்கும் ஆலோசனைகளைத் தீவிரமாகப் பின்பற்றுமாறு நெதன்யாகு கேட்டுக்கொண்டுள்ளார்.