இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்க தீவிர நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கிரிக்கட் மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கிரிக்கட் மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் என்பதை இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.

எனவே இதனை தேசிய பிரச்சினையாக கருதி இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தீர்மானம் நிறைவேற்றியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.இது அரசியல் தலையீடு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் கவுன்ஸிலின் தலைவர் ஷம்மி டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு கிரிக்கட் தடை விதித்ததாக கிரிக்இன்போ இணையத்தளம் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கிரிக்கட் இந்த நாட்டு மக்களின் பொதுச் சொத்தானதே தவிர அவரது தனிப்பட்ட சொத்து அல்ல. அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தால் அது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் நிறைந்த நிர்வாகக் குழுவின் கொடுங்கோன்மைக்கு எதிராக அனைத்து கிரிக்கட் பிரியர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் சுமார் பத்தாயிரம் பாடசாலைகளில் சிறுவர்கள் கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நாட்டில் கிரிக்கட் உரிமையை மீளப் பெற வேண்டும் என்பதே அந்த சிறுவர்கள் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கை. அதற்காக அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Share this Article