இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் இன்று (செப்டம்பர் 21) நடைபெறுகிறது.
இது தொடர்பில், இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் 1982ஆம் ஆண்டு நடந்தது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர். ஜயவர்தன, ஹெக்டர் கொப்பேகடுவவை தோற்கடித்து 52.91% வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார்.
இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் 1988ஆம் ஆண்டு நடைபெற்று, அதில் சிறிமாவோ பண்டாரநாயக்கவை தோற்கடித்து ரணசிங்க பிரமதாச 50.43% வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார்.
1993ஆம் ஆண்டு நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஜனாதிபதி ரணசிங்க பிரமதாச உயிரிழந்ததை அடுத்து, அப்போது பிரதமராக இருந்த டீ.பீ. விஜேதுங்க நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
பின்னர், 1994ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது ஜனாதிபதி தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 62.26% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காமினி திசாநாயக்க கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மனைவி ஸ்ரீமா திசாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டும் தோல்வியடைந்தார்.
1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து 51.12% வாக்குகளுடன் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஜனாதிபதியானார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 50.02% வாக்குகளை பெற்று, ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து வெற்றிபெற்றார்.
பின்னர், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேக்கா இடையே போட்டி நடைபெற்றது, இதில் மஹிந்த ராஜபக்ஷ 57.88% வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியானார்.
7வது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தல் 2015ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் மைத்திரிபால சிறிசேன 51.28% வாக்குகளுடன் வெற்றி பெற்றார், அதே நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ 47.58% வாக்குகளை மட்டுமே பெற்றார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ 52.25% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவருக்கு எதிராக சஜித் பிரேமதாச மற்றும் அனுர குமாரதிசாநாயக்க ஆகியோர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.